அதிகாரம் / Chapter 28

திருக்குறள் 276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் விளக்கம்

சாலமன் பாப்பையா

மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.

English explanation

In mind renouncing nought, in speech renouncing every tie,Who guileful live,- no men are found than these of 'harder eye'

Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it).

மேலும் தமிழ் உரைகள்

மு. வரதராசனார்

மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

திருக்குறளார் வீ. முனிசாமி

மனத்தில் ஆசைகள் நீங்காமல் வைத்துக்கொண்டு ஆசை இல்லாதவர்கள் போல வஞ்சித்து வாழ்கின்ற கொடிய தன்மை யுடையவர்களைப் போலக் கொடியவர்கள் உலகில் இல்லை.

மணக்குடவர்

நெஞ்சிற் றுறவாராய்த் துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போலக் கொடியா ரில்லை யுலகத்து.

பரிமேலழகர்

நெஞ்சின் துறவார் - நெஞ்சால் பற்று அறாது வைத்து; துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர்போல்; வண்கணார்இல் - வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை. விளக்கம் (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, "யாம்மறுமைக் கண் தேவராதற் பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்" என்று அறியாது ஈந்தாரை, அது கொண்டு இழிபிறப்பினராக்குதல். அவர் இழிபிறப்பினராதல் 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி - உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர்ஏறே" (சீவக. முத்தி 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல்' என்றார்.)

கலைஞர் மு. கருணாநிதி

உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை