அதிகாரம் / Chapter 3

திருக்குறள் 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர். அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர். செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.

பரிமேலழகர்

செயற்கு அரிய செய்வார் - பெரியர்-ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்; செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்ய மாட்டாதார் சிறியர். விளக்கம் (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம், நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புக்கள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய "நாலிரு வழக்கின் தாபதபக்கம்" என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.)

English explanation

Things hard in the doing will great men do;Things hard in the doing the mean eschew

The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.