அதிகாரம் / Chapter 25
திருக்குறள் 242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக: பல வழியினும் ஓடி யாராயினும் தமக்கு அவ்வருளே துணையாம். நல்லாற்றானாடியருளாள்க என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங்களையுஞ் செய்கவென்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது.
பரிமேலழகர்
நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, 'நமக்குத்துணை யாம் அறம் யாது?' என்று ஆராய்ந்து, அருளுடையராக; பல ஆற்றான் தேரினும் துணை அஃதே-ஒன்றையொன்று ஒவ்வாத சமயநெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாம் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை. விளக்கம் (அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாய இன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒருஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின், மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது: 'இது கூடும், இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.)
English explanation
The law of 'grace' fulfil, by methods good due trial made,Though many systems you explore, this is your only aid
(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)