அதிகாரம் / Chapter 110

திருக்குறள் 1096

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும். இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.

பரிமேலழகர்

தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர்போலக் கடுஞ்சொற் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தால் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும். விளக்கம் (கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து; வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றவை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.)

English explanation

Though with their lips affection they disown,Yet, when they hate us not, 'tis quickly known

Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.