அதிகாரம் / Chapter 109
திருக்குறள் 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ?.
பரிமேலழகர்
தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது. கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் - இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர் கொல் - அன்றி ஒருமானுட மாதரோ; என நெஞ்சு மாலும் - இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. விளக்கம் (ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற்சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். கனங்குழை: ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும் தன் வருத்தமும் பற்றி, 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும்பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினான்.)
English explanation
Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,Is she a maid of human kind? All wildered is my mind
Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed.