அதிகாரம் / Chapter 10
திருக்குறள் 100
இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.
பரிமேலழகர்
இனிய உளவாக இன்னாத கூறல்-அறம் பயக்கும்-இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று-இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். விளக்கம் ('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தாவனவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.)
English explanation
When pleasant words are easy, bitter words to use,Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.